செய்திகள்

கோவை அருகே டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த டாஸ்மாக் பாருக்கு அபராதம்

கோவை அருகே டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக டாஸ்மாக் பாருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாலை மலர்

கோவை:

கோவை மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறையினர் மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் வீதி, வீதியாக சென்று கொசு மருந்து அடிக்கும் பணியை பார்வையிட்டு வருகின்றனர். டெங்கு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

டெங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமான வீடுகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் ஆய்வு செய்து அபராதம் விதித்து வருகின்றனர்.

தாளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் புவனேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலிக்கநாயக்கன்பாளையத்தில் பாக்கு உற்பத்தி செய்யும் இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது கொசு உற்பத்திக்கு காரணமாக இருந்த உரிமையாளர் செல்வராஜூக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தொடர்ந்து அங்குள்ள டாஸ்மாக் கடையில் உள்ள பார் பகுதியில் ஆய்வு செய்ததில் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர். மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் ரூ.4 லட்சம் வரை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் சுகாதார அலுவலர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை ரூ.28 லட்சத்து 32 ஆயிரத்து 800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் மாவட்டம் முழுவதும் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்ததாக தனியார் நிறுவனங்கள், பள்ளிகள் உள்பட பல்வேறு இடங்களுக்கு ரூ.32½ லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.