நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசாரிபள்ளம் மற்றும் தக்கலை அரசு ஆஸ்பத்திரிகளில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
மேலும் மாவட்டம் முழுவதும் டெங்கு நோய் பராவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. கொசு மருந்து அடிப்பது, நோய் பாதித்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது போன்றவையும் சுகாதார முறை மூலம் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக மாவட்டம் முழுவதும் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு மற்றும் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.
இருந்தாலும் குமரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காணப்பட்டது. நோய் தாக்கியவர்கள் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.
இது போல நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி கண்ணன் (வயது 34) என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காய்ச்சலால் அவதிபட்டார். அவரை உறவினர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவரை உறவினர்கள் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி கண்ணன் பரிதாபமாக இன்று காலை இறந்து போனார். டெங்கு காய்ச்சலால் தான் கண்ணன் இறந்து போனதாக அவரது உறவினர்கள் புகார் கூறினர். இது பற்றி அவர்கள் சுகாதார துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர்.
ஆனால் சுகாதார துறை அதிகாரிகள் இதனை மறுத்து உள்ளனர். அவர்கள் கூறும்போது, வடிவீஸ்வரம் பகுதியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு எதுவும் இல்லை. அங்கு சுகாதார பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படுகிறது. கண்ணன் சாவு குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள், என்றனர்.
இறந்து போன கண்ணனுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் கண்ணனின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாமாக இருந்தது.