பலியான குழந்தை அபினவ் 
செய்திகள்

கேரளாவில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு கைக்குழந்தை - 9 பேர் பலி

கேரளாவில் ஒரே நாளில் டெங்கு காய்ச்சலுக்கு கைக்குழந்தை உள்பட 10 பேர் பலியானார்கள். டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து நோயாளிகள் பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

மாலை மலர்

திருவனந்தபுரம்:

கேரளாவில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வந்தது.

கடந்த ஓராண்டில் டெங்கு காய்ச்சலுக்கு 100-க்கும் அதிகமானவர்கள் பலியானார்கள். டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. சுகாதாரத்துறையும் ஊர் ஊராகச் சென்று நோய் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து தடுப்பு ஊசிகள் போட்டனர்.

என்றாலும் திருவனந்தபுரம், பத்தினம் திட்டா மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது.

குமரி மாவட்ட எல்லையான பாறசாலை, நெய்யாற்றின்கரை பகுதிகளில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தனர்.

கேரளாவில் நேற்று ஒரே நாளில் கைக்குழந்தை உள்பட 10 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியானார்கள். நெய்யாற்றின்கரையை அடுத்த காட்டாக்கடையைச் சேர்ந்த அபினவ் (வயது 3), ரமேஷ் (36), மணிகண்டன் (36), கொல்லத்தைச் சேர்ந்த ஜெயலீலா (63), ஆலுவாவைச் சேர்ந்த சுகதன் (56), ஆஷா (32), பிரியா (25), ரவீந்திரன் (65) உள்பட 10 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

டெங்கு காய்ச்சலுக்கு அடுத்தடுத்து நோயாளிகள் பலியாகி வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

நெய்யாற்றின்கரை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று நீண்ட வரிசையில் ஏராளமான நோயாளிகள் பலமணி நேரம் காத்திருந்து சிகிச்சை பெற்று சென்றனர்.

இதுபோல தனியார் ஆஸ்பத்திரிகளிலும் நோயாளிகள் அதிகளவில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர்.

கேரளாவில் டெங்கு பாதிப்பை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.

பலியான குழந்தை அபினவ்.