செய்திகள்

சென்னையில் டெங்கு காய்ச்சல் பீதியில் போலீசார் - 20 ஆயிரம் பேர் நில வேம்பு கசாயம் குடித்தனர்

சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவுவதால் போலீசார் மத்தியில் பீதி நிலவுகிறது. டெங்கு காய்ச்சலை தடுக்கவும், கட்டுப்படுத்தவும் சென்னை முழுவதும் 20 ஆயிரம் போலீசார் நில வேம்பு கசாயம் குடித்தனர்.

சென்னை:

தமிழகத்தில் பரவலாக டெங்கு காய்ச்சல் அறிகுறி காணப்படுகிறது. சென்னையிலும் அதன் பாதிப்பு உள்ளது.

டெங்கு காய்ச்சலால் சென்னையில் போலீசாரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டெங்கு அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் போலீசாரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பாதிப்புக்குள்ளான போலீசாரை நேரில் பார்வையிட்ட போலீஸ் அதிகாரிகள் சிகிச்சை பற்றி டாக்டர்களிடம் கேட்டறிந்தனர்.

டெங்கு காய்ச்சல் பரவுவதால் சென்னையில் போலீசார் மத்தியில் பீதி நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்தவும், டெங்கு காய்ச்சலை தடுக்கவும் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்க கமி‌ஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நேற்று முதல் சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் நில வேம்பு கசாயம் இன்றும் வழங்கப்பட்டது. நாளையும் கொடுக்கப்படுகிறது.

கூடுதல் கமி‌ஷனர்கள் சாரங்கன், ஜெயராம் ஆகியோரது மேற்பார்வையில் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இணை ஆணையர் சந்தோஷ்குமார், துணை கமி‌ஷனர் டாக்டர் சுதாகர் ஆகியோரது தலைமையில் அண்ணாநகர், அம்பத் தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

நொளம்பூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி போலீசாருக்கு நிலவேம்பு கசாயத்தை வழங்கி தானும் குடித்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்களுக்கும், மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. சென்னை முழுவதும் 20 ஆயிரம் போலீசார் நில வேம்பு கசாயம் குடித்தனர்.

நொளம்பூரில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி போலீசாருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கிய காட்சி.

SCROLL FOR NEXT