கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை அடுத்துள்ள உடையநாதபுரம் ஊராட்சிக்குட்பட்ட விலக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (வயது53).
விவசாயியான இவர் கடந்த ஒரு வாரமாக கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தார். பரமக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டும் காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்ததில் டெங்கு பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
தனி வார்டில் சேர்க்கப்பட்டு முத்துசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் முத்துசாமி பரிதாபமாக இறந்தார்.
கமுதி, பார்த்திபனூர், அபிராமம் ஆகிய பகுதிகளில் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதிய மருத்துவர்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்