செய்திகள்

புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி

புதுக்கோட்டை அருகே டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கூத்தாடிவயல் கிராமத்தை சேர்ந்த சரவணன் மகன் ஜெயராமன் (வயது 23). இவர் கோட்டைப்பட்டினம் பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜெயராமனுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரை அவரது பெற்றோர், மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு ஜெயராமன் இறந்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி வந்தது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தினர். அதன்பிறகு டெங்கு காய்ச்சலின் தாக்கம் குறைந்தது. தற்போது ஜெயராமன் டெங்கு காய்ச்சலுக்கு பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.