செய்திகள்

சின்னசேலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவன் பலி

சின்னசேலம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவன் பலியானார். விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 12 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கல்லாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல். இவரது மகன் கவியரசு(வயது 12). இவன் அங்குள்ள ஆரம்ப பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில நாட்களாக கவியரசு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதனைத்தொடர்ந்து அவனை கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

பின்னர் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு காய்ச்சல் அதிகரித்தது. டாக்டர்கள் உடலை பரிசோதித்து பார்த்தபோது கவியரசுக்கு டெங்கு இருப்பது தெரிந்தது.

நேற்று இரவு 9 மணியளவில் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்தநிலையில் இன்று காலை கவியரசு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தான்.

விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு இதுவரை 12 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.