ரம்ஜான் பாத்திமா 
செய்திகள்

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு சிறுமி பலி

கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 5 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாலை மலர்

கோவை:

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள நாராயணசாமி காலனியை சேர்ந்தவர் மன்சூர் அலி. இவரது மனைவி சர்மிளா. இவர்களுக்கு 5 வயதில் ரம்ஜான் பாத்திமா என்ற பெண் குழந்தை இருந்தது.

சிறுமிக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்து வந்தது. இதற்காக சிறுமியை அவரது பெற்றோர் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர்.

கடந்த 18-ந் தேதி திடீரென ரம்ஜான் பாத்திமாவின் உடல் நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து அவரது பெற்றோர் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் காய்ச்சல் குணமாகவில்லை.

இதனையடுத்து ரம்ஜான் பாத்திமாவை அவரது பெற்றோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து டாக்டர்கள் ரம்ஜான் பாத்திமாவை சிறப்பு வார்டில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று ரம்ஜான் பாத்திமா பரிதாபமாக இறந்தார்.

தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள டெங்கு காய்ச்சல் சிறப்பு வார்டில் 4 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 25 பேரும் என மொத்தம் 29 பேர் காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் கடந்த 2 நாளில் காய்ச்சல் பாதிப்புடன் 141 பேர் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.

சிறுமி டெங்கு காய்ச்சலுக்கு பலியானதையொட்டி அவர் வசித்து வந்த பகுதிகளில் சுகாதார துறையின் டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் தண்ணீரை திறந்து வைக்க கூடாது. தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் மருந்து கடைகளில் மாத்திரைகள் வாங்கி சாப்பிடாமல் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தி வருகிறார்கள்.