கோவை:
கோவை மாவட்டத்தில் கடந்த 2½ மாதங்களாக டெங்கு, வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை டெங்கு காய்ச்சலுக்கு 26 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 10 பேரும் பலியாகி உள்ளனர்.
கோவை அரசு ஆஸ்பத்திரியில் டெங்கு காய்ச்சலுக்கு 48 பேரும், வைரஸ் காய்ச்சலுக்கு 130 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு டாக்டர்கள் சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
மேலும் கோவை மாநகர பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிகளில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலுக்கு 400-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அவர்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை மூடி வைக்க வேண்டும். தொடர் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு சென்று ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.