கோப்பு படம் 
செய்திகள்

கொரோனா முன் எச்சரிக்கையாக மதுக்கடைகளை மூட வேண்டும் - சமூக வலை தளங்களில் கோரிக்கை

கொரோனா முன் எச்சரிக்கையாக மதுக்கடைகளை மூட வேண்டும் என சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாலை மலர்

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இதன் முக்கிய நடவடிக்கையாக 5-ம் வகுப்பு வரையில் பள்ளிக்கூடங்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. முக்கியமான கோவில்களின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சளி, காய்ச்சல் அறிகுறியுடன் உள்ளவர்கள் கோவில்களுக்கு வரவேண்டாம் என்றும் அறிவிறுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிக அளவில் இருக்கும் என்கிற அச்சம் காரணதாகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அப்படி பார்த்தால் டாஸ்மாக் பார்களில்தான் கூட்டம் அலைமோதுகிறது. பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்யும் லாரி டிரைவர்கள் சங்கமிக்கும் இடமும் டாஸ்மாக் பார்தான்.

இப்படி அனைவரும் ஒன்று கூடும் டாஸ்மாக் பார்களில் சுகாதார சீர்கேடும் அதிகமாகவே உள்ளது. இதனால் நோய் தொற்று அதிகம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளளன.

இதன் காரணமாக கொரோனா முன் எச்சரிக்கையாக டாஸ்டாக் மதுக்கடைகளையும் உடனடியாக மூட வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் தங்களது ஆதங்கங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ‘வைரசுக்கு பயந்து கோவிலை மூடறாங்க... பள்ளிக்கூடத்தை மூடறாங்க... டாஸ்மாக்கை ஏன் மூடவில்லை... அங்கே நோய் வராதா?’ என்று கேட்டு பதிவுகளை போட்டு வருகின்றனர்.