பல்லடம்:
பல்லடத்தில் ஆவின் நிறுவனத்தின் கீழ் செயல்படும் அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்துக்கு கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு மட்டுமே பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. அதற்கு பிறகு கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படாமல் உள்ளது. தற்போது பால் கொள்முதல் செய்யும் பாலின் அளவை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் குறைத்து கொள்முதல் செய்யுமாறு நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். மேலும் பாலை முழுமையாக வழக்கம் போல் கொள்முதல் செய்ய வேண்டும். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக ஒரு லிட்டர் பால் ரூ.30-க்கு கொள்முதல் செய்த தனியார் பால் நிறுவனங்கள் தற்போது ரூ.15-க்கு தான் கொள்முதல் செய்கிறது. பருத்திக்கொட்டை 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1800, தேங்காய் புண்ணாக்கு 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1600, பாளைத்தவிடு 50 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.800 என்ற விலையில் விற்பனையாகிறது.
ஆவின் நிறுவனம் அதே காரணத்தை கூறி 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை பால் கொள்முதலை குறைத்து ஒரு லிட்டர் பாலை ரூ.24 முதல் ரூ.26 வரை விலை கொடுத்து கொள்முதல் செய்கிறது. இதே நிலை நீடித்தால் கால்நடைகளை பராமரிக்க முடியாமல் அடிமாட்டுக்கு கால்நடைகளை விற்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள்.
இதனை தவிர்க்க தமிழக அரசு பால் உற்பத்தியாளர்களின் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். கொரோனா பொதுமுடக்கம் முடியும் வரை பால் உற்பத்தியாளர்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கால்நடைகளை பாதுகாக்க, பராமரிக்க தீவனங்களை இலவசமாக வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கி மற்றும் வங்கிகளில் பால் உற்பத்தியாளர்கள் வாங்கியுள்ள கடன் தொகைகளை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.