செய்திகள்

டெல்டா மாவட்டத்தில் பருவமழை தொடங்கியது

தஞ்சையில் நேற்று பெய்த மழையில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்தது.

மாலை மலர்

தஞ்சாவூர்:

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கி கடந்த மாதம் தான் முடிவடைந்துள்ளது. வெயிலின் வேட்கையால் வெளியில் யாரும் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருந்தனர்.

இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பருவமழை பெய்ய தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. அதன் படி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

தஞ்சையில் நேற்று மாலை மேகமூட்டம் சூழ்ந்தது. பின்னர் இரவு பயங்கர சத்தத்துடன் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து 30 நிமிடங்கள் பெய்த மழையால் சாலைகள் மழை நீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு சாலையில் வாகனங்களை இயக்கினர்.

தஞ்சை பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அரசு விரைவு போக்குவரத்து வளாகத்தில் உள்ள தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தீப்பிடித்து எரிந்தது.

நேற்று முன்தினம் நாகை, திருவாரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. தஞ்சை மாவட்டமான கும்பகோணம், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. தஞ்சையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஒருசில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. பருவ மழை தொடங்கி இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.