செய்திகள்

டெல்லி: பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணம் - தப்பியோடிய வகுப்புத் தோழன் கைது

வடகிழக்கு டெல்லியின் கார்வால் பகுதியில் பள்ளி கழிப்பறையில் மாணவர் மரணமடைந்தது தொடர்பாக தப்பியோடிய வகுப்புத் தோழனை போலீசார் கைது செய்துள்ளனர். #DelhiStudentdeath #Tusshar

புதுடெல்லி:

வடகிழக்கு டெல்லியின் கார்வால் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்துவந்த துஷார் (16), என்ற 9-ம் வகுப்பு மாணவன் கடந்த 1-ம் தேதி அப்பள்ளியின் அப்பள்ளியின் கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தான். இதைக்கண்ட சக மாணவர்கள் துஷாரை மீட்டு அருகிலுள்ள ஜி.டி.பி. மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து மாணவனின் பெற்றோர் கூறுகையில், பள்ளியில் சில மாணவர்கள் துஷாருடன் சண்டை போட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் துஷார் கடுமையாக தாக்கப்பட்டிருக்கலாம் என புகார் தெரிவித்தனர். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்தனர். துஷார் டயரியா எனும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் உள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அப்பள்ளியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீசார் ஆராய்ந்து பார்த்தனர். அதில் அந்த மாணவன் கழிவறைக்குள் சென்றதும், அவனுடன் பயின்ற நான்கு பேர் பின் தொடர்ந்து உள்ளே சென்றுள்ளனர். அதன்பின் ஏற்பட்ட மோதலில் அந்த மாணவனின் கழுத்து மற்றும் முகத்தில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக அவன் மரணமடைந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து துஷாரின் மரணம் தொடர்பாக அவனுடன் பயின்றுவந்த மூன்று மாணவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடிய மற்றொரு மாணவனை தேடி வந்தனர். இந்நிலையில், தப்பியோடிய மாணவனை நேற்று மாலை கஜுரி காஸ் பகுதியில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர். #DelhiStudentdeath #Tusshar #classmateapprehended #tamilnews