செய்திகள்

டெல்லியில் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி தமிழக விவசாயிகள் போராட்டம்

டெல்லியில் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

புதுடெல்லி:

கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டம் நேற்று 23-வது நாளை எட்டியது.

தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் நேற்று தங்களது உடல் முழுவதும் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி, கையில் மண்டை ஓடுகளை ஏந்தியபடி ஜந்தர் மந்தர் சாலையில் ஊர்வலமாக சென்றனர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி அய்யாக்கண்ணு கூறுகையில், ‘எத்தனையோ போராட்டங்களை நாங்கள் நடத்தி பார்த்து விட்டோம். ஆனால் பிரதமர் மோடி சந்திக்க மறுக்கிறார். விவசாயிகள் இந்த நாட்டில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள். அதனால்தான் உடலில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்திக்கொண்டு போராடுகிறோம்.

நாளை (இன்று) எங்களது கோரிக்கைகளுக்காக தமிழ்நாட்டின் அனைத்து எம்.பி.க்களிடமும் கையெழுத்து பெற்று பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க உள்ளோம்’ என்றார்.