புதுடெல்லி:
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் முடிவடைவதை அடுத்து அடுத்த மாதம் 17-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் ஏற்கனவே தொடங்கி விட்டது.
ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவோ அல்லது எதிர்க்கட்சிகளோ வேட்பாளரை அறிவிக்க வில்லை. எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொதுவான வேட்பாளரை நிறுத்துவதற்கு பாரதிய ஜனதா முயற்சித்து வருகிறது. ஆனால், இது சாத்தியப்படுமா என்று தெரியவில்லை.
வேட்பாளரை தேர்வு செய்வது சம்பந்தமாக நாளை பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிகிறது. அதன் பின்னர் கூட்டணி கட்சி தலைவர்களையும் கலந்தாலோசித்து முடிவு எடுக்க இருப்பதாக தெரிகிறது.
இறுதி கட்ட முடிவை பிரதமரும், கட்சி தலைவர் அமித்ஷாவும் எடுப்பார்கள்.
இதற்கிடையே 20-ந் தேதிக்குள் ஆளும் கட்சி வேட்பாளரை அறிவிக்காவிட்டால் 21-ந்தேதி எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி வேட்பாளரை தேர்வு செய்ய இருப்பதாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறி இருக்கிறார்.
பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரான அத்வானியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று அந்த கட்சியின் ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக நடிகர் சத்ருகன் சின்கா இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளார்.
ஆனால், அத்வானியை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதில மோடிக்கு விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்க்கட்சிகளும் இதற்கு சம்மதிக்காது என்று தெரிகிறது. எனவே, அத்வானியை நிறுத்த பாரதிய ஜனதா விரும்பவில்லை.
இதற்கிடையே டெல்லியில் பாரதிய ஜனதா தலைமை அலுவலகம் உள்ள அசோகா ரோட்டிலும் மற்றும் பல இடங்களில் அத்வானியை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், அத்வானிதான் பொருத்தமான வேட்பாளர். அவரை நிறுத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த போவதாக செய்தி வெளியானது. ஆனால், நான் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று சுஷ்மா சுவராஜ் கூறி உள்ளார்.