செய்திகள்

சர்ச்சை சாமியாருக்கு இன்று தண்டனை: டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, அரியானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மாலை மலர்

சர்ச்சை சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங்குக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ளது. இதையடுத்து, அரியானாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இளம் பெண்களை கற்பழித்த வழக்கில் அரியானாவை சேர்ந்த சாமியார் குர்மீத் ராம் ரகீம் சிங் குற்றவாளி என சி.பி.ஐ. கோர்ட் கடந்த 25-ம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கான சிறை தண்டனை தொடர்பாக இன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறது.

சாமியார் குர்மீத் சிங் தண்டிக்கப்பட்டதை தொடர்ந்து அரியானா, பஞ்சாப், டெல்லி ஆகிய பகுதிகளில் நிகழ்ந்த வன்முறையில் முப்பதுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். சுமார் 200 பேர் காயமடைந்தனர். இன்று தண்டனை விபரம் வெளியாகும்போது அசம்பாவித சம்பவங்கள் நிகழலாம் என அஞ்சப்படுகிறது.

இதைதொடர்ந்து, கற்பழிப்பு வழக்கில் குர்மீத் சிங்கிற்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுகிறது. அவர் அடைக்கப்பட்டு இருக்கும் சிறைக்கே சென்று இந்த தண்டனை விவரத்தை அறிவிக்குமாறு சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதிக்கு, பஞ்சாப்-அரியானா ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி சுனாரியா சிறைக்கு சென்று குர்மீத்தின் தண்டனை விவரத்தை சி.பி.ஐ. நீதிபதி அளிக்கிறார்.

இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரியானா அரசுக்கு பஞ்சாப்-அரியானா ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது. தண்டனை விவரம் அறிவிக்கப்படுவதை தொடர்ந்து மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.

இந்நிலையில், தண்டனை விவரம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சுனாரியா சிறை அமைந்துள்ள ரோடக் நகர் முழுவதும் பல்வேறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநிலம் முழுவதும் உள்ள குர்மீத் சிங்கின் ஆசிரம கிளைகள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூடும் இடங்களாக கருதப்படும் பகுதிகளை பாதுகாப்பு படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். இதைப்போல பஞ்சாப் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் உள்ளனர்.

வன்முறை மற்றும் அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக அரியானாவில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல பஞ்சாப்பில் மால்வா பிரதேசத்தில் அடங்கியுள்ள 13 மாவட்டங்களிலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. மேலும், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்.