செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச வைபை சேவை - இன்று தொடங்கியது

டெல்லி வைஷாலி பகுதியுடன் நொய்டா நகரை இணைக்கும் ‘புளூ லைன்’ மெட்ரோ ரெயில் சேவைக்குட்பட்ட 50 ரெயில் நிலையங்களில் இன்று இலவச வைபை சேவை தொடங்கியது.

புதுடெல்லி:

நாட்டின் தலைநகரான டெல்லியில் ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன், புளூ லைன், எல்லோ லைன் ஆகிய சிறப்பு வழித்தடங்களின் வழியாக மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

இதில் சுமார் 50 கிலோமீட்டர் தூரத்தை கொண்ட ‘புளூ லைன்’ வழித்தடம் கிழக்கு டெல்லியில் உள்ள வைஷாலி பகுதியுடன் நொய்டா சிட்டி செண்டர் இடையே துவாரகா துணை நகரத்தை இணைக்கிறது. ஏற்கனவே, ஏர்போர்ட் எக்ஸ்பிரஸ் லைன் வழித்தடத்தில் செல்லும் பயணிகளுக்கு இலவசமாக வைபை சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி வைஷாலி பகுதியுடன் நொய்டா நகரை இணைக்கும் ‘புளூ லைன்’ மெட்ரோ ரெயில் சேவைக்குட்பட்ட 50 ரெயில் நிலையங்களில் இன்று இலவச வைபை சேவை தொடங்கியது.

இதன்மூலம், இந்த வழித்தடத்தில் உள்ள 50 நிலையங்களின் வழியாக பயணம் செய்பவர்கள் இலவசமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை பார்க்க முடியும். வீடியோ அழைப்பின் மூலம் பிறருடன் பேசுவதுடன், முக்கியமான சில விளையாட்டு போட்டிகளையும் பயணத்துக்கிடையே கண்டுகளிக்க முடியும்.