செய்திகள்

தொப்பி சின்னம் ஒதுக்குவது குறித்து தேர்தல் ஆணையமே முடிவு செய்யும்: டெல்லி ஐகோர்ட்டு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் டி.டி.வி.தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையமே முடிவு செய்யும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். அணிக்கு தேர்தல் கமி‌ஷன் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கி சமீபத்தில் உத்தரவிட்டது.

தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டி.டி.வி.தினரகன் டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்தார். இதேபோல எடப்பாடி பழனிசாமியும், ஓ.பி.எஸ்.சும் தனித்தனியாக ‘கேவியட்’ மனு தாக்கல் செய்து இருந்தனர்.

இதற்கிடையே தனக்கு தொப்பி சின்னம் ஒதுக்க வேண்டும் என்றும், சின்னம் தொடர்பாக இன்றே உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் கேட்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கு அவசர வழக்காக டெல்லி ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

தினகரனுக்கு தொப்பி சின்னம் ஒதுக்குவது தொடர்பான விவகாரத்தில் தேர்தல் கமி‌ஷன் சார்பில் அளிக்கப்பட்ட பதிலில் தினகரன் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை. அவர் சுயேட்சை வேட்பாளர் மட்டுமே. அதன் அடிப்படையில் அவருக்கு சின்னம் ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தினகரனுக்கு தொப்பி சின்னம் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆர்.கே. நகரில் தொப்பி சின்னத்தை பலர் கேட்கும் பட்சத்தில் ஒருவருக்கு எப்படி ஒதுக்க முடியும் என்று வாதிடப்பட்டது.


தொப்பி சின்னத்தை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்ய முடியுமா? என்று முதல்- அமைச்சர் தரப்புக்கு நீதிபதி கேள்வி எழுப்பினார். சின்னம் தொடர்பான கருத்துக்களை தேர்தல் கமி‌ஷன்தான் சொல்ல முடியும் என்று முதல்- அமைச்சர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்டபிறகு தொப்பி சின்னம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு மாலை அறிவிக்கப்பட்டது.