புதுடெல்லி:
டெல்லியில் 2014-ம் ஆண்டு 5 வயது சிறுமி, தன்னுடைய 10 வயது சகோதரனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தாள். அப்போது ஹனி (வயது 23) என்பவர் சிறுவனிடம் ரூ.10-ஐ கொடுத்து கடைக்கு அனுப்பி விட்டு, சிறுமியை கடத்தி சென்றார்.
பின்னர் தனிமையில் வைத்து அந்த சிறுமியிடம் பாலியல் வன்கொடுமையில் வாலிபர் ஈடுபட்டார். சிறுமி அலறியதால், அவளை நடுத்தெருவில் விட்டு விட்டு அந்த வாலிபர் தப்பி ஓடி விட்டார். தெருவில் ஆடை இன்றி சிறுமி அழுது கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் விசாரித்து அவளுடைய பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
தங்கள் மகள் சீரழிக்கப்பட்டதை அறிந்த அவளுடைய பெற்றோர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர். இது தொடர்பான வழக்கு டெல்லி விரைவு கோர்ட்டில் நடந்து வந்தது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை வைத்து சிறுமியை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டு விசாரணையின் போது, என்ன நடந்தது என கூற அந்த சிறுமி தயங்கினாள். இதனால் ஒரு ‘பர்பி’ பொம்மையை சிறுமியிடம் கொடுத்து, உனக்கு நேர்ந்த கொடுமையை இதன் மூலம் விளக்குமாறு நீதிபதி கூறினார். அப்போது வாலிபர் தன்னிடம் நடந்து கொண்டதை பொம்மையை தொட்டு சிறுமி வாக்குமூலம் அளித்தார். இதை வைத்து அந்த வாலிபருக்கு விரைவு கோர்ட்டு சிறை தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அந்த வாலிபர் மேல்முறையீடு செய்தார். அப்போது விரைவு கோர்ட்டு சரியான முறையில் இந்த வழக்கை விசாரித்ததாக பாராட்டிய நீதிபதிகள், அந்த வாலிபருக்கு விதித்த தண்டனையை உறுதி செய்தனர்.