செய்திகள்

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்

இரட்டை இலை சின்னம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை ஏப்ரல் 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி:

இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க. கட்சியை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இதனை எதிர்த்து டிடிவி தினகரன் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இவ்வழக்கை டெல்லி உயர்நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை இன்று தொடங்கியது. இன்று கே.சி.பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும் பொதுச்செயலாளர் விவகாரத்தை மீண்டும் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் வாதாடினார். இன்றைய வாதம் நிறைவடைந்ததையடுத்து விசாரணை 20-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. #Tamilnews