செய்திகள்

தகுதிநீக்கம் செய்யப்பட்ட மத்திய பிரதேச மந்திரியின் மனுவை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்

மத்திய பிரதேசத்தில் தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மந்திரி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க அனுமதி கோரி தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மாலை மலர்

போபால்:

மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அமைச்சரவையில் நீர்வளத்துறை மந்திரியாக பதவி வகித்தவர் நரோத்தம் மிஷ்ரா. இவர் தாதியா சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் தேர்தல் செலவு தொடர்பாக தவறான கணக்குகளை தாக்கல் செய்ததற்காக தேர்தல் கமிஷன் இவரை 3 ஆண்டுகள் தகுதி நீக்கம் செய்து உள்ளது. மேலும் தாதியா தொகுதியை காலியாக இருப்பதாக அறிவித்தது.

இந்நிலையில், வரும் 17-ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வாக்களிக்க தனக்கு அனுமதி கேட்டு மாநில உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். ஆனால், அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நரோத்தம் மிஷ்ரா முறையீடு செய்தார். பின்னர் அங்கிருந்து டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு இவ்வழக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் வியாழக்கிழமை முடிவடைந்ததையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், மனுதாரர் நரோத்தம் மிஷ்ராவின் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், உயர்நீதிமன்ற அமர்வோ அல்லது உச்ச நீதிமன்றமோ தலையிட்டால் தவிர, ஜனாதிபதி தேர்தலில் அவரால் வாக்களிக்க முடியாது. இதுதொடர்பாக சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்த உள்ளார் மிஷ்ரா.