செய்திகள்

கார்த்தி சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது டெல்லி ஐகோர்ட்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. #KartiChidambaram

மாலை மலர்

புதுடெல்லி:

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரம் கடந்த மாதம் 29-ம் தேதி சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நான்கு முறை அவரை விசாரிக்க பாட்டியாலா ஹவுஸ் கோர்ட் சி.பி.ஐ.க்கு அனுமதி அளித்தது. டெல்லியில் தீவிரமாக விசாரிக்கப்பட்ட கார்த்தியை மும்பை அழைத்துச் சென்றும் சி.பி.ஐ விசாரித்தது.

இதனை அடுத்து, தற்போது அவர் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என அவர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிந்த பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி ஐகோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது. 10 லட்சம் ரூபாய் பிணையத்தொகையாக செலுத்த வேண்டும். வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது. சாட்சி மற்றும் வங்கிகணக்குகளில் செல்வாக்கை காட்டக் கூடாது என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. #KartiChidambaram #INXMediaCase