புதுடெல்லி:
குஜராத்தில் இருந்து டெல்லி மேல்–சபையில் காலியாக உள்ள 3 இடங்களுக்கு கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, பல்வந்த்சிங் ராஜ்புத் (காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தவர்) ஆகியோரும், காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேலும் போட்டியிட்டனர். 3 இடங்களுக்கு 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்ததால், தேர்தலில் கடும் பரபரப்பு ஏற்பட்டது.
அமித்ஷா மற்றும் ஸ்மிரிதி ரானி ஆகியோரின் வெற்றி உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 3-வது இடத்தையும் வெற்றி பெற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டது. இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 40-க்கும் அதிகமானோர் பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தேர்தலில் வாக்களித்தனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் வெற்றிக்கு தேவையான 44 வாக்குகளை பெற்று அகமது பட்டேல் வெற்றி பெற்றார்.
இந்நிலையில், அகமது பட்டேல் இன்று மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பாராளுமன்ற வளாகத்தில் உள்ள துணை ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆனந்த் சர்மா, குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.