நாட்டின் வடமாநிலங்களில் தேர்தல் வெற்றி, திருமண விழா, பிறந்தநாள் விழா ஆகிய கொண்டாட்டங்களின்போது வசதிபடைத்த சிலர் உற்சாக மிகுதியில் வானத்தை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டு வேடிக்கை காட்டும் சம்பவங்கள் பெருகி வருகின்றன.
இதைப்போன்ற சம்பவங்களில் சில அசம்பாவிதங்களில் முடிந்துள்ளன. துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களும் சில இடங்களில் உயிரிழந்ததாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், வடகிழக்கு டெல்லியில் உள்ள உஸ்மான்புரா பகுதியில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் புத்தாண்டை வரவேற்கும் வகையில் அப்பகுதி மக்கள் ஒன்றுகூடி பட்டாசுகளை வெடித்து கொண்டிருந்தனர்.
அப்போது, எங்கிருந்தோ பாய்ந்துவந்த துப்பாக்கி தோட்டாக்கள் அங்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்த 8 வயது சிறுவனின் உடலில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தான்.