70 இடங்களைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 8-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப்போட்டி உருவாகி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 67 இடங்களை கைப்பற்றி இமாலய வெற்றி பெற்றது. அரவிந்த் கெஜ்ரிவால் அசைக்க முடியாத பலத்துடன் முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார்.
மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு 3 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. காங்கிரஸ் கட்சிக்கு அதுவும் கிடைக்காமல், ஒரு எம்.எல்.ஏ. கூட இல்லாத படுதோல்வி ஏற்பட்டது.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி, பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகளிடையே மீண்டும் பலப்பரீட்சை ஏற்பட்டுள்ளது. இந்த தடவை டெல்லி தேர்தலை பா.ஜனதா கவுரவ பிரச்சனையாக கருதுகிறது. கடந்த மே மாதம் பாராளுமன்ற தேர்தலின் போது டெல்லியில் உள்ள 7 எம்.பி. இடங்களிலும் பாரதிய ஜனதா வெற்றி பெற்று இருந்தது.
ஏ.பி.பி. நியூஸ்-சி- வோட்டர் நடத்திய அந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று காலை வெளியானது. அதில் டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பின்படி 70 இடங்களில் ஆம் ஆத்மி கட்சிக்கு 59 இடங்கள் வரை கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 8 இடங்கள் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு 8 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 3 இடங்களும் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டு வரை தொடர்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மீது டெல்லி மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது புதிய கருத்துக்கணிப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மே மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு ஆம் ஆத்மியை விட அதிக வாக்குகள் கிடைத்து இருந்தது. 6 மாதத்துக்குள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்கு சதவீதத்தில் இழப்பு ஏற்பட்டுள்ளது.