கோப்பு படம். 
செய்திகள்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க தாமதம்

பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் 2 மணி நேரத்துக்கும் மேல் அலைகழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி அருகே உள்ள பெரியபோது கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் கோகுலகிருஷ்ணன் (வயது 6). இவர் நேற்று விளையாடியபோது 5 ரூபாய் நாணயத்தை தவறுதலாக விழுங்கினார்.

சிறிது நேரத்தில் சிறுவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. பின்னர் நாணயத்தை விழுங்கியது குறித்து பெற்றோரிடம் கூறி அழுதார்.

5 ரூபாய் நாணயத்தை விழுங்கியது தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அருகிலுள்ள பெரிய போது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்னார். ஆனால் அங்கு சிகிச்சை அளிக்காமல் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினர்.

இதனையடுத்து பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிறுவனை அழைத்துச்சென்றனர்.

அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்காமல் 2 மணி நேரத்துக்கும் மேல் அலைகழிக்கப்பட்டனர். பின்னர் தண்ணீர் அதிகம் கொடுங்கள். தானாக சரியாகி விடும் என்று கூறி அனுப்பி விட்டனர்.

இதனையடுத்து அங்கு இருந்த சமூக ஆர்வலர்கள் சிலர் பொள்ளாச்சி சப்- கலெக்டர் வைத்திநாதனை தொடர்பு கொண்டு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை கூட அளிக்கவில்லை என தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சப்-கலெக்டர் வைத்திநாதன் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரி டாக்டரை தொடர்பு கொண்டு உடனே நாணயத்தை விழுங்கிய சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார். இதனையடுத்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு நாணயத்தை வெளியேற்றினர்.

SCROLL FOR NEXT