செய்திகள்

அவதூறு வழக்கு: ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராக உத்தரவு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது வங்கி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலை மலர்

அகமதாபாத்:

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் இயக்குனர்களில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷாவும் ஒருவர் ஆவார்.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்ட போது ரூ.745.59 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை இந்த வங்கி முறைகேடு செய்து சட்டப்பூர்வமானதாக மாற்றியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரண்தீப்சிங் சுர்ஜேவாலா ஆகியோர் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதை மறுத்த மாவட்ட கூட்டுறவு வங்கி ராகுல்காந்தி பொய் குற்றச்சாட்டை முன் வைத்ததாக கூறி அவருக்கு எதிராக அகமதாபாத் கூடுதல் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல்காந்தி இம்மாதம் 27-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் கடந்த திங்கட்கிழமை ராகுல்காந்தி தரப்பில் அவரது வக்கீல் ஆஜரானார்.

அப்போது வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை குஜராத்தியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க மேலும் சில காலம் தேவைப்படுகிறது. மேலும் கடந்த திங்கட்கிழமை நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவு தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். எனவே ராகுல்காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றார்.

இதைத்தொடர்ந்து ராகுல் காந்தி ஜூலை 12-ந் தேதி ஆஜராக வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது.

அன்றைய தினமே ரண்தீப் சிங் சுர்ஜேவாலாவும் ஆஜராக வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.