மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லி கிரிக்கெட் சங்க தலைவராக இருந்தபோது, அச்சங்கத்தில் முறைகேடுகள் நடந்ததாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் 5 பேர் குற்றம் சாட்டினர். இதனால், ரூ.10 கோடி மான நஷ்டஈடு கேட்டு அவர்கள் மீது டெல்லி ஐகோர்ட்டில் அருண் ஜெட்லி வழக்கு தொடர்ந்தார்.
அருண் ஜெட்லியிடம், அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இதற்காக, ஐகோர்ட்டில் இணை பதிவாளர் முன்பு அருண் ஜெட்லி ஆஜரானார். அவரிடம் கெஜ்ரிவால் தரப்பு வக்கீல் ராம் ஜெத்மலானி குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது, ‘இந்த ஊழல் பற்றி நான் எழுதிய கட்டுரையை, அருண் ஜெட்லியின் மிரட்டலால் ஒரு வாரப்பத்திரிகை வெளியிடவில்லை. அருண் ஜெட்லி தனது குற்றத்தை மறைத்து மக்களை ஏமாற்றுகிறார்’ என்று ராம் ஜெத்மலானி கூறினார். அதற்கு அருண் ஜெட்லியும், அவருடைய வக்கீல்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இந்த வார்த்தையை அரவிந்த் கெஜ்ரிவால் சொல்ல சொன்னாரா?’ என்று அருண் ஜெட்லி கேட்க, ‘ஆமாம், அவர்தான் சொல்ல சொன்னார்’ என்று ராம் ஜெத்மலானி கூறினார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.