செய்திகள்

அவதூறு வழக்கில் ஆஜராகாத சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

அவதூறு வழக்கு விசாரணையில் ஆஜராகாத சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விக்ராந்த் வாயித் உத்தரவிட்டார்.

மாலை மலர்

புதுடெல்லி:

ஆமதாபாத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் தலைவரான சக்சேனா மீது, பிரபல சமூக ஆர்வலரும், நர்மதை அணைத்திட்ட இயக்க தலைவருமான மேதா பட்கர் டெல்லி கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்து இருந்தார். இதைப்போல மேதா பட்கர் மீது சக்சேனாவும் அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகளில் மேதா பட்கர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்தார். எனவே அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் இதை ஜூன் மாதம் ரத்து செய்த கோர்ட்டு எதிர்காலத்தில் இந்த விசாரணையில் அவர் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.

ஆனால் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையில் அவர் ஆஜராகாததால் அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி விக்ராந்த் வாயித் நேற்று உத்தரவிட்டார். இந்த வழக்கில் அவருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்குவதாக கூறிய நீதிபதி, இனியும் இத்தகைய போக்கு தொடர்ந்தால், சக்சேனாவுக்கு எதிராக அவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என எச்சரித்தார்.