செய்திகள்

‘பத்மாவத்’ படத்தில் நடிக்க தீபிகா படுகோனே வாங்கிய சம்பளம் ரூ.12 கோடி

‘பத்மாவத்’ படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. #DeepikaPadukone #Padmavati

சர்சையில் சிக்கிய ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் நேற்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து இருக்கிறார். வாள்சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்து இதில் அவர் நடித்துள்ளார்.

சரித்திர கால ஆடைகள், ஆபரணங்கள் அணிந்து ராணியாகவே மாறி இருந்தார். படம் பார்த்தவர்கள் அவரது நடிப்பை பாராட்டி வருகிறார்கள். ஆனால் ராஜபுத்திர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்க்கிறார்கள். தீபிகா படுகோனே தலைக்கு பரிசுகள் அறிவித்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்புடன் அவர் வெளியே செல்கிறார்.

சமீபத்தில் மும்பையில் உள்ள விநாயகர் கோவிலுக்கு சென்று படம் சிக்கல் இல்லாமல் வெளியாக வேண்டி வழிபட்டபோதும் போலீசார் பாதுகாப்புக்காக கூடவே வந்தார்கள். தற்போது படம் வெளியான பிறகும் தீபிகா படுகோனேவுக்கு மிரட்டல்கள் தொடர்கின்றன.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் சத்ரிய மகாசபை என்ற அமைப்பினர் கூடி பத்மாவத் படத்தில் நடித்துள்ள தீபிகா படுகோனேவின் மூக்கை அறுத்து வந்தால் பரிசுகள் அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளனர். இதனால் அவர் அதிர்ச்சியில் இருக்கிறார்.

பத்மாவத் படத்தில் நடிக்க தீபிகா படுகோனே ரூ.12 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முந்தைய படங்களில் ரூ.10 கோடிதான் வாங்கி இருக்கிறார். பத்மாவத் சரித்திர படம் என்பதாலும் அதிக நாள் கால்ஷீட் கொடுக்க வேண்டி இருந்ததாலும் பெரிய தொகை பெற்று இருக்கிறார். வேறு எந்த இந்தி நடிகையும் இவ்வளவு சம்பளம் வாங்கியது இல்லை என்கின்றனர். பிரியங்கா சோப்ராதான் ரூ.11 கோடி சம்பளம் வாங்கி இதுவரை முதல் இடத்தில் இருந்தார்.

பத்மாவத் படம் அதிக பட்ஜெட்டில் தயாரானதால் ரூ.160 கோடிக்கு காப்பீடும் செய்து இருந்தனர். 

SCROLL FOR NEXT