செய்திகள்

தீபாவை விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத்தை கண்டித்து போராட்டம்: 150 பேர் கைது

தீபாவை விமர்சனம் செய்த நாஞ்சில் சம்பத்தை கண்டித்து போராட்டம் நடத்திய தீபா பேரவையினர் 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை:

அ.தி.மு.க. அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் நேற்று ஒரு டி.வி. நிகழ்ச்சியில் பேசியபோது எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் தலைவி ஜெ.தீபாவை விமர்சனம் செய்தார்.

இதற்கு நாஞ்சில் சம்பத்தை கண்டித்து இன்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் உயர்மட்டக்குழு பொறுப்பாளர் வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் தலைமையில் தி.நகர் சிவஞானம் தெருவில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக கோ‌ஷம் எழுப்பியபடி சென்றனர்.

தி.நகர் தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி கலைந்து போகும்படி கூறினர். ஆனால் தீபா பேரவையினர் தொடர்ந்து ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதையடுத்து போலீசார் கைது நடவடிக்கையில் இறங்கினார்கள்.

இதில் தொண்டன் சுப்பிரமணியன், நிர்வாகிகள் ஆறுமுகபாண்டி, புருசோத்தமன், காஸ்டின் உள்பட 150 பேர் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றி செல்லப்பட்டனர்.

இந்த திடீர் போராட்டத்தால் தி.நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT