செய்திகள்

ஜெ.தீபா வீட்டில் புகுந்த போலி வருமான அதிகாரியை பிடிக்க அதிரடி வேட்டை

ஜெ.தீபா வீட்டில் புகுந்த போலி அதிகாரியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. #Deepa

மாலை மலர்

சென்னை:

ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் நிறுவனருமான ஜெ.தீபா தி.நகர் சிவஞானம் தெருவில் வசித்து வருகிறார். அவரது பேரவை அலுவலகமும் வீட்டிலேயே இயங்கி வருகிறது.

இந்த நிலையில் நேற்று காலையில் தீபாவின் வீட்டுக்கு டிப்-டாப் உடை அணிந்த வாலிபர் ஒருவர் சென்றார். அப்போது தீபா வீட்டில் இல்லை. அவரது கணவர் மாதவன் மட்டும் இருந்தார். அவரிடம் தன்னை வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி அந்த வாலிபர் அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் வைத்திருந்த அடையாள அட்டையில் மித்தேஷ் குமார் என்கிற பெயர் இடம் பெற்றிருந்தது.

மத்திய நிதித்துறையில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி அந்தஸ்தில் இருப்பதாகவும் அடையாள அட்டையில் குறிப்பிடப்பட்டிருந்தது. சோதனை நடத்துவதற்கான வாரண்டு ஒன்றையும் அந்த நபர் காட்டினார்.

இதனை தொடர்ந்து மாதவன் அவரை வீட்டுக்குள் அனுமதித்தார். வருமான வரித்துறை அதிகாரி என்று கூறிய நபர் தீபாவின் வீட்டில் அங்குலம் அங்குலமாக சோதனை நடத்தினார்.

இதற்கிடையே இதுபற்றி தீபா பேரவையின் வக்கீல் அணியினருக்கு மாதவன் தகவல் கூறினார். அவர்களும் அங்கு வந்தனர். வருமான வரி அதிகாரி என்று கூறிய நபர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக மாம்பலம் உதவி கமி‌ஷனர் செல்வம், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சேகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

இதனால் உஷாரான மர்ம நபர் போலீசில் சிக்கி விடக்கூடாது என்று உஷாரானார். காம்பவுண்டு சுவரில் ஏறி ஆய்வு செய்வது போல் நடித்து நைசாக அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதன் பின்னரே அவர் போலி அதிகாரி என்பது தெரிய வந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி மாம்பலம் போலீஸ் நிலையத்தில் மாதவன் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பி ஓடிய நபர் விட்டுச் சென்ற அடை யாள அட்டையை வைத்து அவர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தி.நகர் துணை கமி‌ஷனர் அரவிந்தன் மேற்பார்வையில் போலி வருமான வரி அதிகாரியை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீசார் நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடத்தினர். ஆனால் போலி அதிகாரியாக நடித்த மர்ம நபர் பற்றி எந்த துப்பும் துலங்காமலேயே உள்ளது. அவர் யார்? என்பது இன்னும் தெரியவில்லை. இதனை தொடர்ந்து தப்பி ஓடிய போலி அதிகாரியை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

தப்பிச் சென்ற வாலிபரின் போட்டோவை வைத்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அவரை பிடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வாலிபரின் போட்டோவை அனுப்பி வைத்துள்ளனர். இவர் ஏதேனும் குற்ற வழக்குகளில் தொடர்புடையவரா? என்பது பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலி வருமான வரி அதிகாரியாக நடித்த வாலிபர் தீபாவை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்திலேயே வந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்தில்தான் அந்த வாலிபரின் செயல்பாடுகளும் அமைந்திருந்தன. தீபாவிடம் போனில் பேசிய அவர் உங்களிடம் ஒரு டீல் பேச வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் மூலம் தீபாவை மிரட்டி லட்சக் கணக்கில் அந்த வாலிபர் பணம் பறிக்க திட்டமிட்டதும் அம்பலமாகி உள்ளது. வாலிபர் பிடிபட்டால்தான் அவரது பின்னணி என்ன? அவர் மட்டுமே இந்த செயலில் ஈடுபட்டாரா? மோசடிக் கும்பல் எதுவும் செயல்பட்டுள்ளதா? என்கிற விவரங்கள் தெரிய வரும்.

தீபா மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ராமச்சந்திரன் என்கிற முட்டை வியாபாரி, ரூ.1 கோடி மோசடி புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் போலி அதிகாரியாக நடித்து தீபாவிடம் வாலிபர் ஒருவர் பண மோசடியில் ஈடுபட திட்டமிட்டது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #Deepa #tamilnews