செய்திகள்

ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை எடப்பாடி அரசு நிறைவேற்றவில்லை - ஜெ.தீபா குற்றச்சாட்டு

ஜெயலலிதா தேர்தலின் போது வாக்குறுதியாக கொடுத்த திட்டங்களை எடப்பாடி அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை என்று எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில பொது செயலாளர் ஜெ.தீபா கூறினார்.

கரூர்:

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் மாநில பொது செயலாளர் ஜெ.தீபா கரூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நடிகர் கமல் அரசியலுக்கு வருவது பற்றி கருத்து தெரிவிப்பதற்கு ஒன்றும் இல்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். மக்கள் பிரச்சினைகளை சரியாக கையாள்கிறார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

தமிழகத்தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் பயங்கரவாதம், தீவிரவாதம் அடக்கப்பட்டுள்ளது. போலீசார் திறம்பட கையாண்டு வருகின்றனர். அதேபோல தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கிலும் எந்த பிரச்சினை இல்லை. இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரணம் இல்லை. சட்டம்-ஒழுங்கை காவல் துறை சரியாக பார்த்து வருகிறது.

நான் (ஜெ.தீபா) சுற்றுப்பயணம் செல்லும் இடத்தில் எனக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அரசியல் ரீதியாக மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என ஏற்கனவே தெரிவித்துவிட்டேன்.

என்னுடைய ஆதரவு யாருக்கு என்பதை தற்போது என்னால் எதுவும் சொல்ல முடியாது. தேர்தலில் எந்தவிதமான கூட்டணி அமையும் என்பதை எதிர்பார்க்க முடியாது. மக்களின் எதிர்பார்ப்பு, சிந்தனை மாறியுள்ளது.

அ.தி.மு.க.வுக்கு இருந்த ஒருங்கிணைந்த பலம் தற்போது இல்லை. அ.தி.மு.க. அணிகளாக பிரிந்து சிதறி உள்ளது. மக்கள் மற்ற கட்சிகள் மீதும் நம்பிக்கை வைக்கவில்லை. இதனால் தேர்தலில் பெரும்பான்மையுடன் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அப்படி பெரும்பான்மையுடன் அமைந்தால் தமிழகத்திற்கு நல்லது.

ஜெயலலிதா தேர்தலின் போது வாக்குறுதியாக கொடுத்த திட்டங்களை எடப்பாடி அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. விவசாயிகளின் வங்கி கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. பெண்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவில்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் ஆட்சி இயங்குகிறது.

தமிழக மக்களின் தேவைகளை கருத்தில் கொள்ளாமல் மத்திய அரசு என்ன சொல்கிறதோ? அதனையே தமிழக அரசு செய்து கொண்டு இருக்கிறது. அ.தி.மு.க.வை சார்ந்தே எனது அமைப்பும் இருப்பதால் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இணைந்ததால் அ.தி.மு.க. உடன் நான் இணைவது பற்றி தற்போது எதுவும் கூறமுடியாது.

அ.தி.மு.க.வில் இணைந்து செயல்படும்படி மத்திய அரசு எனக்கு எதுவும் அழுத்தம் தரவில்லை. காவிரி தீர்ப்பு குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து கட்சி கூட்டத்திற்கு இதுவரை அழைப்பு வரவில்லை. வந்தால் பங்கேற்பேன்.

இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

SCROLL FOR NEXT