பிரணாப் முகர்ஜி 
செய்திகள்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் -ராணுவ மருத்துவமனை தகவல்

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்தது. தொடர்ந்து வென்டிலேட்டரில் இருப்பதாகவும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை என்றும் டாக்டர்கள் கூறியிருந்தனர். அதேசமயம் பிரணாப்பின் முக்கிய உறுப்புகளின் செயல்பாடுகள் சீராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் அபிஜித் முகர்ஜி இன்று டுவிட்டரில் தகவல் தெரிவித்தார். அவரது உடல் உறுப்புகள் சீராக இயங்குவதால் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். அவர் விரைவாக குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த தகவல் வெளியாகி சில மணி நேரங்களில் ராணுவ மருத்துவமனை தரப்பில் புதிய செய்தி வெளியிடப்பட்டது. அதில், பிரணாப் முகர்ஜிக்கு நுரையீரல் தொற்றுக்கான அறிகுறிகள் அதிகரித்திருப்பதால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியால் செயற்கை சுவாசம் வழங்கப்படுவதாகவும், அவரது உடல்நிலையை மருத்துவ நிபுணர்கள் குழு கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.