கோப்புபடம் 
செய்திகள்

உடுமலை பகுதியில் குடிநீர் திட்ட முறைகேடுகளைதடுக்க மீட்டர் பொருத்த முடிவு

குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக போதியளவு குடிநீர் வழங்கினாலும் உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் ‘குடிநீர் வடிகால் வாரியம் திட்டத்தின் அடிப்படையில் உரிய அளவு வழங்குவதில்லை.

மாலை மலர்

மடத்துக்குளம்:

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவிலுள்ள பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு திருமூர்த்தி அணை, தளி கால்வாயை ஆதாரமாகக்கொண்டு நான்கு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

இதன் வாயிலாக, தளி, சங்கராமநல்லூர், மடத்துக்குளம், கொமரலிங்கம், கணியூர் பேரூராட்சிகள் மற்றும் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 409 ஊரக குடியிருப்புகளிலுள்ள 2.50 லட்சம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

பூலாங்கிணர் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் நாளொன்றுக்கு 3.10 எம்.எல்.டி., நீரும், கணக்கம்பாளையம் திட்டத்தில் 7.4 எம்.எல்.டி., மடத்துக்குளம் திட்டத்தில் 11.76 எம்.எல்.டி., குடிநீர் மற்றும் குடிமங்கலம் திட்டத்தில் 9.03 எம்.எல்.டி., என நான்கு திட்டங்களில் இருந்து நாளொன்றுக்கு 31.29 எம்.எல்.டி., குடிநீர் எடுக்கப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படுகிறது.

இந்தநிலையில் குடிநீர் வடிகால் வாரியம் வாயிலாக போதியளவு குடிநீர் வழங்கினாலும் உள்ளாட்சி அமைப்புகள் தரப்பில் ‘குடிநீர் வடிகால் வாரியம் திட்டத்தின் அடிப்படையில் உரிய அளவு வழங்குவதில்லை. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

எதிர்கால மக்கள் தொகையை அடிப்படையாகக்கொண்டு, நான்கு திட்டங்களும் வடிவமைக்கப்பட்டு  குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. திருமூர்த்தி அணை நீர் இருப்பு காரணமாக திட்டங்கள் இயக்கத்தில் சிக்கல் இல்லை. ஆனால்  குடிநீர் போதிய அளவு வரவில்லை என சில உள்ளாட்சிகளில் புகார் தெரிவிக்கின்றனர். எடுக்கும் குடிநீர் எங்கு செல்கிறது என்ற கேள்வி எழுகிறது.

கிராமங்களில் முறைகேடு இணைப்புகள் மற்றும் திருட்டு காரணமாகவே சிக்கல் ஏற்படுகிறது. 20 ஆண்டு வரை மக்கள் தொகை உயர்வை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களில் அதே அளவிற்கு, நீர் எடுத்து தற்போதுள்ள மக்களுக்கும் கூடுதலாகவே குடிநீர் வழங்கப்படுகிறது.

பிரச்சினைக்கு தீர்வாக தற்போது, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்களுடன் இணைந்து மீட்டர் பொருத்தும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகளிலும்  குடிநீர் திட்ட பிரதான குழாய்களிலிருந்து பிரியும் பகுதியில்  மீட்டர் பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த குடியிருப்புக்கு ஒதுக்கப்பட்ட குடிநீர்  வாரியம் வாயிலாக முழுமையாக வழங்கப்படும்.

இதனை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக ஆவணப்படுத்தி  அதற்குரிய தொகை செலுத்தினால் போதும். இரு துறை அதிகாரிகளும் கண்காணிப்பு செய்வார்கள். ஒதுக்கீட்டை விட குறைவாக குடிநீர் சென்றால் உடனடியாக சரி செய்யப்படும். திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும்  குடிநீர் அளவு மானி பொருத்தும் பணி தொடங்கியுள்ளது என்றனர்.