செய்திகள்

திருமங்கலம் அருகே கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை

திருமங்கலம் அருகே கடன் தொல்லையால் தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்தார்.

மாலை மலர்

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சிந்துபட்டி போலீஸ் சரகத்துக்குட்பட்ட பன்னிக் குண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் காசிநாதன் (வயது 47). இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காசிநாதன் புதியதாக வீடு கட்டினார். இதற்காக பலரிடம் ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கினார். ஆனால் அதனை திருப்பிச் செலுத்த முடியவில்லை.

கடன் தொகை வட்டியோடு சேர்த்து ரூ.40 லட்சம் அளவிற்கு உயர்ந்து விட்டது. கடன் கொடுத்தவர்கள் வீட்டிற்கு வந்து பணம் கேட்டதால், காசிநாதன் மனவேதனை அடைந்தார்.

வீட்டிலிருந்து பருத்தி காடு செல்வதாக கூறிச்சென்ற அவர், பன்னிக்குண்டு பகுதி சுடுகாட்டில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் காசிநாதன் தூக்கில் தொங்குவதை கண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சிந்துபட்டி போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.