குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே தோட்டனூத்து மேட்டூர் காலனியைச் சேர்ந்தவர் மணி (வயது 31). இவர் திண்டுக்கல்லில் கண்ஸ்ட்ரக்ஷன் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி கவுரி. இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். தற்போது கவுரி 6 மாத கர்ப்பிணியாக உள்ளார். கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு பகுதிகளில் மணி கடன் வாங்கி இருந்தார்.
கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மணி கடும் மன உளைச்சலில் இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியே சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் திண்டுக்கல் தாலுகா போலீசில் புகார் அளித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் வழக்குபதிவு செய்து மணியை தேடி வந்தனர். இந்த நிலையில் நிலக்கோட்டை அருகே முசுவனூத்து கரட்டு பகுதியில் மணி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து நிலக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ் பெக்டர் சங்கரேஸ்வரன் மணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.