செய்திகள்

முதல்- அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: ஸ்டாலின் மீது போலீசார் வழக்குப்பதிவு

முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. தலைவர் முக ஸ்டாலின் மீது திருவாரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #mkstalin #edappadipalanisamy

திருவாரூர்:

திருவாரூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் பூண்டி கலைவாணன், நாகை பாராளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் கடந்த மாதம்(மார்ச்) 20-ந் தேதி நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது கொடநாடு விவகாரத்தில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி உண்மைக்கு புறம்பாக பேசியதாக சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் உள்ள பாபு முருகவேல் என்பவர் திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான முருகதாசிடம் புகார் கொடுத்தார்.

இதையடுத்து திருவாரூர் தி.மு.க. பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு கடிதம் கொடுத்த தி.மு.க. வை சேர்ந்த பிரகாசிடம் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸ் விளக்கம் கேட்டார். அதற்கு, கொடநாடு விவகாரம் குறித்து கோர்ட்டில் நடந்து வரும் வழக்கை பற்றி ஸ்டாலின் பேசியதாக தெரிவித்தார்.

இந்த விளக்கத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் முருகதாஸ் ஏற்க மறுத்து அவர் திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகாரின் பேரில் திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதல்- அமைச்சர் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புதல் 171 (1ஜி) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார். #mkstalin #edappadipalanisamy

SCROLL FOR NEXT