ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுடன் புரட்சிப் படையினர் நடத்திவரும் மோதலில் பத்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த படையினருக்கு சவுதி அரேபியா தலைமையிலான இஸ்லாமியப் படைகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவுடன் நாட்டின் தலைநகரான சனா பகுதியை கைப்பற்றியுள்ள புரட்சிப் படையினர் அந்நகரை தங்களது ஆளுமைக்கு உட்படுத்தி வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து சனா நகரில் காலரா எனப்படும் வாந்திபேதி நோய் படுவேகமாக பரவத் தொடங்கியது. இதையடுத்து, ஆட்சி நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள ஹவுத்தி அரசின் நிர்வாகம் கடந்த மாதம் சனா நகரில் அவசர நிலை சட்டத்தை பிரகடனப்படுத்தியது.
கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதியில் இருந்து இம்மாதம் 4-ம் தேதிவரை சுமார் 86 ஆயிரம் மக்கள் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சனாவை கடந்து அருகாமையிலுள்ள அமானத் அல்-செமா மாகாணம், ஹோடெய்டா, டய்ஸ் மற்றும் ஏடென் நகரிலும் காலரா நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த மே மாதம் 27-ம் மாதம் வரை 471 பேர் காலராவுக்கு பலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த பத்து நாட்களில் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 681 ஆக உயர்ந்துள்ளது.