தமிழகத்தின் குமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் கடந்த 30-ந் தேதி தாக்கிய ‘ஒகி’ புயலால் பெருத்த சேதம் விளைந்தது. இந்த புயலில் சிக்கி கணிசமான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.
குறிப்பாக இந்த பகுதிகளில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகி உள்ளனர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு வரும் நிலையில், சில மீனவர்களின் பிணங்களும் மீட்கப்பட்டு வருகின்றன.
கேரளாவில் ‘ஒகி’ புயலில் சிக்கி மீனவர்கள் உள்பட 33 பேர் நேற்று முன்தினம் வரை உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அங்குள்ள ஆலப்புழா மற்றும் கொச்சி இடையேயான கடற்பகுதியில் இருந்து நேற்று காலையில் மேலும் 3 மீனவர்களின் பிணம் மீட்கப்பட்டது. இத்துடன் கேரளாவில் புயலுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.
கோழிக்கோடு-கொச்சி இடையே படகுடன் தத்தளித்துக்கொண்டு இருந்த 15 மீனவர்களை விமானப்படை விமானம் ஒன்று நேற்று கண்டுபிடித்தது. இதைத்தொடர்ந்து அவர்களை மீட்பதற்காக டோர்னியர் விமானம் மற்றும் கப்பலை கடற்படை அனுப்பி வைத்துள்ளது.