புதுடெல்லி:
துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் ஆகும்.
இத்தேர்தலில், ஆளுங்கட்சி வேட்பாளராக முன்னாள் மத்திய மந்திரி வெங்கையா நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான 18 கட்சிகள் கொண்ட எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்கு வங்க முன்னாள் கவர்னரும் மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வேட்பாளர்கள் இருவரும் இன்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
கோபாலகிருஷ்ண காந்தி, மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட யாகூப் மேமனுக்கு அளிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென குரல் கொடுத்ததாக ஆளுங்கட்சி மற்றும் சிவசேனா கட்சி குற்றஞ்சாட்டி இருந்தது.
வேட்பு மனு தாக்கல் செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய கோபால் காந்தி கூறியதாவது:-
“நான் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கு ஆதரவாகவும் செயல்பட மாட்டேன். சிவசேனா கட்சியினர் அவர்களது கடமையை சரியாக செய்து வருகின்றனர். யாகூப் மேமனுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக நான் குரல் கொடுத்தது சரியான செயல் தான். மரணதண்டனை பழங்கால வழிமுறை. இப்போது அதை தொடர்வது தவறான செயல். இந்தியாவில் மரணதண்டனையை ஒழிக்க வேண்டும் என்பதே எனது கொள்கை. மகாத்மா காந்தி மற்றும் அம்பேத்கரும் இதே கொள்கையை உடையவர்கள், அவர்களிடம் இருந்தே எனக்கு இந்த எண்ணம் வந்தது” என்றார்.
மேலும் பாகிஸ்தான் சிறையில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் குல்பூஷன் ஜாதவிற்கு ஆதரவாகவும் அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக அவர் கூறினார்.