பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு கடந்த வாரம் திங்கட்கிழமை தொடங்கியதில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி. வங்கி மோசடி உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஏழாவது நாளான இன்று காலை மக்களவையில் தெலுங்கு தேசம் கட்சி, காங்கிரஸ், அ.தி.மு.க., தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதிக்கு வந்து முழக்கங்கள் எழுப்பினர். அவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை, ‘எங்களுக்கு நீதி வேண்டும்’ என்பதுதான். ஆந்திர விவகாரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.க்களும் இணைந்துகொண்டனர். இடதுசாரி உறுப்பினர்கள் சிலர் இருக்கையில் எழுந்து நின்று முழக்கங்கள் எழுப்பினர்.
இதனால் கேள்வி நேரம், ஜீரோ அவர் எதுவும் நடைபெறவில்லை. இன்று மாலை 5 மணிக்கு நிதி மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பல்வேறு நிலைக் குழுக்களின அறிக்கைகள் மட்டும் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மேற்கொண்டு அவையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் முதலில் பகல் 12 மணி வரையிலும், பின்னர் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக முதலில் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோதும் அமளி நீடித்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பொருளாதார குற்றவாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் மசோதாவை இன்று நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், தொடர்ந்து பாராளுமன்றம் முடங்கியிருப்பது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.#BudgetSession #LokSabha #RajyaSabha #Adjourned #tamilnews