சென்னை:
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென்மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கு காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டர் (எல்.பி.ஜி.) தேவை அதிகரித்துள்ளது. தற்போது, நாள் ஒன்றுக்கு 3 லட்சம் வரையிலான சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகின்றன. சமையல் எரிவாயு சிலிண்டர் தங்கு தடையின்றி பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக, தமிழகத்தில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 12 பாட்லிங் பிளான்ட்டுகளும் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்கள் உள்ளிட்ட அனைத்து நாட்களிலும் இயங்கி வருகிறது.
பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற ஏழை பயனாளிகளுக்கு ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 3 சிலிண்டர்களை இலவசமாக அளிப்பதாக அரசு அறிவித்துள்ளதால், சிலிண்டர் வினியோகத்தில் உஜ்வாலா பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வினியோகஸ்தர்களுக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
ஏப்ரல் மாத சிலிண்டருக்கான சில்லறை விற்பனை விலைக்குரிய தொகை, தமிழகத்தில் உள்ள 16 லட்சத்து 70 ஆயிரம் இந்தியன் ஆயிலின் உஜ்வாலா திட்ட பயனாளிகளில் 96 சதவீதத்துக்கு மேற்பட்டவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 50 சதவீதத்துக்கும் மேல் அதாவது 8 லட்சத்திற்கும் மேலான உஜ்வாலா திட்ட பயனாளிகள் சிலிண்டர்கள் புக் செய்து உள்ளனர்.
ஏறத்தாழ புக் செய்த அனைவருக்கும் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. இதுவரை, முதல் இலவச சிலிண்டரை பெற்றுக் கொள்ளாத உஜ்வாலா பயனாளிகள், வருகிற 28-ந் தேதிக்குள் புக் செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. அவ்வாறு புக் செய்தால் ஏப்ரல் மாத முடிவில் அவர்களுக்கு சிலிண்டர் வினியோகிக்கப்படும். இதன் பிறகுதான், மே மாதம் வழங்கப்படும் 2-வது இலவச சிலிண்டருக்கான தொகையை மே முதல் வாரத்தில் டெபாசிட் செய்ய இயலும். இருப்பினும், உஜ்வாலா பயனாளிகள், முதல் இலவச சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு 15 நாட்களுக்குப் பிறகே 2-வது இலவச சிலிண்டருக்காக புக் செய்து கொள்ள முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.