செய்திகள்

டிவில்லியர்ஸ், மில்லர் ரன்-அவுட் திருப்புமுனை: விராட் கோலி கணிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸ், டேவிட் மில்லரின் ரன்-அவுட்டே ஆட்டத்தின் திருப்பு முனை என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

8-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ‘பி’ பிரிவில் உள்ள இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகள் மோதிய ஆட்டம் நேற்று லண்டன் நகரில் நடந்தது. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கிய ஆட்டமாக இருந்தது.

ஆனால் இந்தியாவின் அபார பந்துவீச்சு, பீல்டிங் கால் தென்னாப்பிரிக்கா 191 ரன்னில் சுருண்டது. இந்தியா தரப்பில் புவனேஸ்வர் குமார், பும்ரா தலா 2 விக்கெட்டும், அஸ்வின், பாண்டியா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர், இம்ரான் தாகீர் ரன்-அவுட் செய்யப்பட்டனர்.

பின்னர் விளையாடிய இந்தியா 38 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன் எடுத்து வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது. ஷிகர் தவான் 78 ரன்னும், விராட் கோலி 76 ரன்னும் எடுத்தனர்.

வெற்றி குறித்து இந்திய கேப்டன் கோலி கூறியதாவது:-

டிவில்லியர்ஸ் ரன்-அவுட்டே ஆட்டத்தின் திருப்பு முனையாகும். எங்களது பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுத்தனர்.

தேவைப்படும்போது விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். பந்துவீச்சாளர்கள் செயல்பாட்டை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். இது எங்களது தன்னம்பிக்கையை அதிகரித்து இருக்கிறது.

டாஸ் ஜெயித்தது நல்ல வி‌ஷயமாகும். உங்களுக்கு வாய்ப்பு வரும்போது அதை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும். எப்போதுமே டிவில்லியர்சை சீக்கிரம் வீழ்த்துவது முக்கியம். இல்லையென்றால் அவர் ரன்களை குவித்து விடுவார்.

ஷிகர் தவான் ஆட்டம் அற்புதமாக இருந்தது. இந்த தொடரில் எங்களது சிறந்த ஆட்டம் இதுதான். அரையிறுதி நடக்கும் பர்கிங்காமில் ஏற்கனவே விளையாடி இருக்கிறோம்.

அந்த ஆடுகளத்தை விரும்புகிறோம். அது எங்களது ஆட்டத்துக்கு தகுந்தபடி உள்ளது. நடந்து முடிந்த ஆட்டத்தை நினைக்காமல் எப்போதும் நம்மை செம்மைப்படுத்தி கொண்டே இருக்க வேண்டும்.