செய்திகள்

சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியாவிற்கு போனில் மிரட்டல் விடுத்த தாவூத் இப்ராகிம்

பா.ஜ.க. தலைவர் ஏக்நாத் கட்சே மீதான நிலமோசடி வழக்கை திரும்பப்பெறுமாறு சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியாவை நிழலுலக தாதா தாவூத் இப்ராகிம் போன் மூலம் மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாலை மலர்

புதுடெல்லி:

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பிரபல சமூக ஆர்வலர் அஞ்சலி தமானியா. இவர் அம்மாநிலத்தில் நடக்கும் மோசடிகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பா.ஜ.க.வை சேர்ந்த முன்னாள் வருவாய்த்துறை மந்திரியான ஏக்நாத் கட்சே மீது நிலமோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கின் காரணமாக ஏக்நாத் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், அஞ்சலி தமானியாவிற்கு நேற்றிரவு ஒரு போன்கால் வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஏக்நாத் மீதான மோசடி வழக்கை திரும்பப்பெறுமாறு மிரட்டல் விடுத்துள்ளார். உடனே அஞ்சலி, அந்த எண்ணை ட்ரூ காலர் ஆப்பில் தேடிப் பார்த்துள்ளார். அப்போது அந்த எண் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தது எனவும், ‘தாவூத் 2’ என்பவருக்கு சொந்தமானது எனவும் காட்டியுள்ளது.

இதையடுத்து, அந்த விவரங்களை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மும்பை வகோலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பின்னர் பேசிய அவர், “எனது கணவருடன் இரவு பேசிக்கொண்டிருந்த போது ஒரு போன்கால் வந்தது. அந்த எண் தாவூத்என்பவருக்கு சொந்தமானது என ட்ரூ காலர் ஆப் காட்டியது. இது தொடர்பாக மும்பை காவல் ஆணையரிடம் பேசினேன். அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்", என கூறினார்.