அம்பத்தூர்:
தாம்பரம் அருகே உள்ள படப்பையை சேர்ந்தவர் பத்மினி (வயது 70). இவர் அயனாவரம் நாராயண மேஸ்திரி தெருவில் உள்ள தனது அக்காள் சரஸ்வதி வீட்டில் தங்கி இருந்தார்.
பத்மினிக்கும் அவரது மாமியார் மேனகாவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் அயனாவரத்துக்கு காரில் வந்த மேனகா, மாமியார் பத்மினியை காரில் கடத்திச் சென்றுள்ளார்.
அப்போது அவருடன் வாலிபர் ஒருவரும் இருந்துள்ளார். இதுபற்றி அயனாவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். பத்மினியை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். அப்போது மேனகா, மாமியார் பத்மினியை திருநின்றவூர் அருகே தனது உறவினர் வீட்டில் அடைத்து வைத்தது தெரிய வந்தது.
போலீசார் அங்கு விரைந்து சென்று பத்மினியை மீட்டனர். அவரை காரில் கடத்திச் சென்ற மேனகாவை கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தின் பின்னணியில் ராஜேஸ்கண்ணா என்ற வாலிபருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதுபற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த கடத்தல் சம்பவம் அயனாவரம் நாராயண மேஸ்திரி தெருவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.