செய்திகள்

பயனர்களின் தகவல்களை பகிர்ந்தீர்களா, இல்லையா? பேஸ்புக்-வாட்ஸ்அப் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை மூன்றாம் தரப்பு நிறுவனங்களுக்கு பகிரப்படுவதாக தொடர்ந்த வழக்கில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள் 4 வாரங்களுக்குள் பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் செல்போன் எண் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்கள், வாட்ஸ்அப்பின் மூல நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும், இதில் விருப்பம் இல்லாதவர்கள் வாட்ஸ்அப்பில் இருந்து விலகிக்கொள்ளலாம் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. அதில், பேஸ்புக் மற்றும் பல்வேறு மூன்றாம் தர நிறுவனங்களுடன் வாட்ஸ்அப் தனது பயனர்களின் தரவுகள் பகிர்ந்துகொள்வதாக குற்றம்சாட்டியிருந்தனர். இந்த வழக்குகளை தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் இவ்வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி அரசின் நடவடிக்கை குறித்து விளக்கினார். இந்தியாவில் தரவுகள் பாதுகாப்பு பிரச்சனைகள் பற்றி விவாதித்து அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், தரவுகள் பாதுகாப்பை முறைப்படுத்துவது தொடர்பாக சட்டம் கொண்டு வர அனைத்து சாத்தியக் கூறுகறும் இருப்பதாகவும் அவர் கூறினார்.

வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அரவிந்த் தாதர் ஆகியோர், இரண்டு நிறுவனங்களும் எந்த  நிறுவனத்துடனும் பயனர்களின் தரவுகளை பகிர்ந்துகொள்ளவில்லை என கூறினர்.