'தென் ஆப்பிரிக்காவுடனான 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்தின் உதவியுடன் புதுமுக வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தினார். இது வீடியோவில் தெளிவாக தெரிந்தது. பந்தை சேதப்படுத்தியதை இருவரும் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து, பந்தை சேதப்படுத்திய புகார் தொடர்பாக ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. மேலும், பந்தை சேதப்படுத்திய பான்கிராப்டுக்கு 9 மாதம் விளையாடவும் தடை விதித்துள்ளது. மேலும், ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் ஐ.பி.எல். 2018 போட்டிகளில் விளையாட மாட்டார்கள் என ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டேரன் லிமேன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு பின்னர் பதவி விலக இருப்பதாக அவர் இன்று அறிவித்துள்ளார்.
ஆனால் பந்து சேதப்படுத்திய விவகாரத்தில் லிமேனுக்கு தொடர்பு இல்லை என்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லேண்ட் நேற்று அறிவித்த நிலையில் லிமேன் பதவி விலகுவதாக அறிவித்துள்ள சம்பவம் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.