மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சமீபத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து சேதமான பசுபதீஸ்வரர் சன்னதியின் மேற்கூரை இன்று இரவு திடீரென இடிந்து விழுந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுரத்தில் இருந்து சுவாமி சன்னதிக்கு செல்லும் வழியில் இருபுறங்களிலும் வளையல்கள், அலங்கார பொம்மைகள், விபூதி-குங்குமம் விற்பனை செய்யும் கடைகள் உள்ளன.
கடந்த 2-ம் தேதி இரவு கோவில் நடை முழுவதும் சாத்தப்பட்டு கோவில் ஊழியர்கள் வெளியேறினர். இரவு சுமார் 10.30 மணி அளவில் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து கரும்புகை வெளி வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே தீயணைப்பு நிலையங்களில் இருந்து 10-க்கும் மேற்பட்ட வண்டிகளில் தீயணைப்பு படையினரும், விளக்குத்தூண், தெற்குவாசல் போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் வந்தபோது ஆயிரங்கால் மண்டபத்தை ஒட்டியிருந்த கடைகளில் தீப்பற்றி எரிந்து கொண்டு இருந்தது. உடனே தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தீ வேகமாக பரவியதால் கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் கருகி சேதமாகின. தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.