பொள்ளாச்சி:
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது முதலமடை ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட அம்பேத்கர் காலனி பகுதியில் தலித் மக்களை சிலர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததுடன், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் நடந்துகொண்டதாக தெரிகிறது. இதனால், அச்சமடைந்த தலித் மக்கள் அம்பேத்கர் காலனி பகுதியிலுள்ள மதுரைவீரன் கோவிலில் தஞ்சமடைந்தனர்.
ஆண்கள் வீட்டை விட்டு வேலைக்கு சென்றால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால், ஆண்களும் வேலைக்கு செல்லாமல் கோவிலில் தங்கியிருந்ததால், உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டது.
இதையறிந்த சினிமா நடிகர்கள், தன்னார்வலர்கள் என பலரும் தலித் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுக்கு தேவையான மளிகை, அரிசி பொருட்களை வழங்கி வருகின்றனர். பொது தொட்டியில் தலித்மக்களை குடிநீர் பிடிக்க சிலர் தொடர்ந்து மறுத்துவருவதால், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டுவந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலக்காடு வருவாய்துறையினர் இருதரப்பிலும் பேச்சு நடத்தி தலித் மக்கள் பொது தொட்டியில் குடிநீர் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் பொது தொட்டியில் குடிநீர் பிடிக்க சிலர் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்தனர். இதையடுத்து, போலீசார் வந்து தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி குடிநீர் தொட்டி அருகேயே காவலுக்கு நின்றனர். அதற்கு பிறகே தலித்மக்கள் குடிநீர் பிடித்துச்சென்றனர்.
இதைக்கண்டித்து தமிழகத்தை சேர்ந்த தலித் விடுதலை கட்சியை சேர்ந்தவர்கள் இருமாநில எல்லையான கோவிந்தாபுரத்தில் எல்லை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தலித் விடுதலைக்கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் விடுதலை செல்வன், மாநில இளைஞரணி நிர்வாகி சகுந்தலா, நிர்வாகிகள் ஆறுமுகம், அப்துல்லா, மூர்த்தி, மகேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
எல்லை முற்றுகை போராட்டத்தையொட்டி தமிழக போலீசார் தமிழக எல்லைப்பகுதியிலும், கேரள போலீசார் கேரள எல்லை பகுதியிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தலித் மக்களை புறக்கணிப்போர் மீது கேரள அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 1 பெண் உட்பட 20 பேரை ஆனைமலை போலீஸார் கைது செய்தனர்.